புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 13 புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் சிவசங்கர், ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆட்சியர் அருணா, எம்எல்ஏக்கள் முத்துராஜா, சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “பணிக் காலத்தில் இறந்து போனவர்களின் வாரிசுதாரர்கள் 36 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பெண்கள் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 12வது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை மூன்றாண்டுக்குள் அதிமுக முடிக்காமல் போனதால், திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அந்த பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்டிருந்த சம்பள விகிதம் மீண்டும் கருணாநிதி வழியில் மேட்ரிக்ஸ் முறையில் வழங்கி ஊதிய உயர்வை வழங்கியுள்ளோம். தற்போது தான் பேச்சுவார்த்தை முடிந்து ஒராண்டு காலம் ஆகிறது. விரைவில் அடுத்த பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுத்து, அதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை தொடங்குவோம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு 685 பேர் பணிக்கு எடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் தொடங்கி முடிவடைகிற வரை இடைக்காலத்தில் பேருந்துகள் நின்று விடாமல் இருக்க, அவுட்சோர்சிங் முறையில் ஓட்டுநர் நடத்துநர்களை எடுத்தோம். அதிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.
மற்ற போக்குவரத்துக் கழகத்திலும் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் அந்த பணிக்கான ஆள் எடுக்கும் நடவடிக்கை நடைபெறும். அதுவரை இந்த அவுட்சோர்சிங் முறை பயன்படுத்தப்படும். மற்ற மாநிலங்களில் நிரந்தரப் பணியாளர்களே இல்லை. தமிழ்நாட்டில் தான் நிரந்தரப் பணியாளர்கள் இருக்கின்றனர்.
பென்ஷன் கொடுத்தவரும் கருணாநிதி தான், டிஏ கொடுத்தவரும் கருணாநிதி தான். பென்ஷன், டிஏவை நிறுத்தியவர்கள் அதிமுக எடப்பாடி ஆட்சி. பென்ஷன், டிஏ வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். சென்னையில் மினி பேருந்துகள் தொடங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
100 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் நடைமுறையில் உள்ளது. விரைவில் டெண்டர் முடிந்த 100 பேருந்துகள் வந்த பிறகு மீதி 400 பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 500 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. திடீரென்று வாகன பழுது ஏற்படுவது, தடுக்க முடியாத ஒன்றுதான். வாகனம் என்பது ஒரு இயந்திரம். அதனால் 20,000 பேருந்துகள் இருக்கக்கூடிய இடத்தில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது" என்றார்.
அதனை தொடர்ந்து, விபத்து நடப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற கேள்விக்கு, “சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறப்பான சாலைகள் இருக்கின்ற காரணத்தினால், புதிய தொழில் நுட்பத்துடன் புதிய வாகனங்கள் வந்து அதிக வேகத்தில் இயக்குவதால் சில இடங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனை தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்” என்றார்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-07-2024/22037626_pud.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்