சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பன் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உயர்கல்வித்துறையின் செயலாளர் கார்த்தி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் வீரராகவராவ், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட் குழு உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "அண்ணா பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயர்கல்வி துறையில் என்னென்ன மேம்பாடுகளை கொண்டு வரலாம் என்கின்ற ஆலோசனை செய்தோம்.
நிதி பற்றாக்குறை என்பது இந்தியா முழுவதும் உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் நிதி பற்றாக்குறையும், சிலவற்றில் நிதியும் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள நிதி பற்றாக்குறை சரி செய்யப்படும். தமிழ்நாடு உயர்கல்வியில் 50 சதவீதமாகவும், இந்தியா முழுவதும் 27 சதவீதமாக உள்ளது. உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது.
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பதவிகளுக்கு ஆளுநரும், முதலமைச்சரும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பர். சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் காலியாக உள்ளது.
சில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதன் அடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. திராவிட இயக்கத்தினை தோற்றுவித்தவர் அண்ணா. அவர் நினைவு நாளில் கலந்துக் கொண்டாதால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இதனை தவிர்த்து எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.
அரசியல் ரீதியாக உள்ள கருத்துகள் தவிர நிர்வாக ரீதியாக நல்ல கருத்துகளை ஆளுநர் கூறினால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். சட்டமன்றத்திற்கு வருகை தர ஆளுநருக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆளுநரும் வருவதாக கூறி இருக்கிறார். அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்கள் இருக்கத் தான் செய்கிறது. நிதி பற்றாக்குறையும் கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது.
கல்லூரிக் கல்வித்துறைக்கு 4ஆயிரம் பேர் வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 24 சதவீதம் சம்பளம் கொடுக்கிறோம். அரசு, பேரிடர் போன்ற பல சவால்களையும் சந்திக்கிறது. அடுத்த கல்வியாண்டிற்கான அனைத்து ஏற்பாடையும் செய்து வருகிறோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் குறித்து பேசக்கூடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பொறியியல் கல்லூரிகள் மோசமாக இல்லை.
அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் 25 பொறியியல் கல்லூரிகள் மோசமான நிலையில் மூடகூடய சூழ்நிலையில் உள்ளது. அவற்றை மூட வேண்டுமா இல்லையா என்பது குறித்து சிண்டிகேட் முடிவெடுக்கும். அமைச்சராக எந்த துறை கொடுத்தாலும் முதலமைச்சரின் தலைமையில் சிறப்பாக பணி செய்வேன்.
ஆளுநருக்கும் அரசுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் அவரது வேலையை பார்க்கிறார். நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆளுநர் நல்லக் கருத்துகளை கூறினால் நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயராகத்தான் இருக்கிறோம். தேசிய கல்வி கொள்கையில் நல்ல விசயங்கள் இருந்தால் அந்த நல்ல கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
அதில் தவறு எதுவும் இல்லை. மாநில கல்வி கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு முதலமைச்சர் தலைமையில் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்கப்படும். வரும் கல்வியாண்டில் அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் முதலமைச்சர் தமிழகம் திரும்ப உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த ஒருவரை, துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் நியமிக்க வேண்டும் என ஆளுநர் பரிந்துரைத்தாலும், தமிழ்நாடு அரசின் முடிவே இறுதியானது. நிச்சயம் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் பீரங்கி குண்டுகள் உருவாக்கி அசத்தல்.. ஐஐடி மெட்ராஸ் சாதனை!