சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கையின் பொது விவாதத்தின் மீது பாமக சட்டமன்ற குழுத் தலைவர் உரையாற்றினார். அப்போது, "69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இன்று(பிப்.21) நடைமுறையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை" என்று கூறினார்.
அதற்கு விளக்கமளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், "மற்ற மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். ஆனால் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அப்படியே உள்ளது. நமது முதலமைச்சர் ஒன்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிரானவர் இல்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை என பிரதமருக்கு நமது முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, "மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். ஆனால், அவர்கள் எடுக்க போவதில்லை. மாநில அரசுக்கு எடுக்க அதிகாரம் இருக்கும் நிலையில் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து பேசினார்.
அப்போது அவரது உரையில் குறுக்கிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது, "ஏற்கனவே அரசுப் பணிகளில் வன்னியர்கள் 12.5 சதவீதம் இருக்கிறார்கள். கல்லூரிகள் சேர்க்கையில் வன்னியர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். துணை ஆட்சியர்களில் 11.5 சதவீதம் வன்னியர்கள் பணியில் இருக்கிறார்கள். பிறகு ஏன் குறைவாக 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்" என ஜி.கே.மணிக்கு கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், முன்னதாக வன்னியர்கள் 10.5 சதவீதத்திற்கும் அதிகமாக அரசுப் பணி, கல்லூரி சேர்க்கையில் பிரதிநிதிதுவம் பெற்றிருக்கும் நிலையில் 10.5 சதவீதம் என குறைவாக பாமக தனி இட ஒதுக்கீடு கேட்பது ஏன் என்றும், பாரதி தாசன் ஆணையம் மூலமாக ஒவ்வொரு சாதியினரும் கல்வி, வேலை வாய்ப்பில் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என தரவுகள் திரட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - அரசுத் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!