தேனி: உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் அரசு உதவி பெறும் சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் வைரவிழா நேற்று (பிப்.2) நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 'சிலருக்கு கல்வி அளித்தால் பத்தாது இன்றைக்கு கூட வளர்ந்த மாநிலங்களில் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டை போல எந்த மாநிலமும் இந்தியாவிலேயே இல்லை. ஒரே காரணம் சம உரிமை, சம வாய்ப்பு எல்லா சமுதாயங்களுக்கும் வாய்ப்பு, பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டது.
நமக்கு ஒரு கடமை இருக்கிறது. கிறிஸ்துவ மத பரப்பாளர்கள் மிஷினரி மற்றும் நிர்வாகங்கள் கல்விக்கு செய்த பணி மகத்தானது. நான் அமைச்சரான பிறகு பல மாவட்டங்களில் பல கல்லூரிகளில் இந்த மாதிரி சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறேன். தமிழ்நாட்டில் இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் கல்வியில் முதலிடம் பெற்ற மாவட்டம் சென்னை அல்ல மதுரை அல்ல கோவை அல்ல. அது 'கன்னியாகுமரி'. ஏன்? கன்னியாகுமரி என்றால் கிறிஸ்தவ நிறுவனங்கள் கூடுதலாக பல நூற்றாண்டுகளாக உள்ளன.
முதலமைச்சர் கூறுவதுபோல, 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில் வாய்ப்பு தந்த சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு கல்வி நிறுவனம் சிறப்பாக 60 ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கும் குழுவிற்கு பள்ளிக்கும் எனது பாராட்டுகள். அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்க உற்பத்தி திறனை உலகளவில் உயர்த்தி பொருளாதாரத்தில் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை. இதற்கு முக்கியமான மிகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனாக தகவல் தொழில்நுட்பத்துறையாகும்.
இதனால் தான், இந்த துறையின் அமைச்சரான நான் இருப்பதை எனக்கு கிடைத்த வரமாக கருதுகிறேன். எனது கணிப்பில் 10,000 வேலைவாய்ப்புகள் இத்துறையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதை 20-லிருந்து 30 ஆயிரம் இலக்கு அடைய அதற்கு பல முயற்சிகள் எடுத்துவருகிறோம்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'குறிப்பாக, இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் சென்னையில் ஒரு பெரிய தொழில்முனைவோர் ஊக்குவிக்கும் நிறுவங்களுடனான சந்திப்பு (venture capitalist -VC) நிகழ்ச்சியை நடத்தி உலக அளவில் புதுப்புது நிறுவனங்களை உருவாக்கியவர்களை அழைக்கப்படுவர். அதில், மாணவர்களுக்கு இலவசமாக அந்நிறுவனங்களுடன் போவதற்கு டிக்கெட் அளித்து நம் மாநில மாணவர்களும் தொழில்நுட்ப புது நிறுவனங்கள் தொடங்கக்கூடியவர்கள் 'ஸ்டார்ட் அப்' (Start up) இந்த பெரிய உலகளவில் மிக சிறப்பான முன்னேறிய நபர்களிடம் பலவற்றை கற்றுக்கொள்வதற்கு சிறப்புமிக்க வாய்ப்பை இம்முயற்சி அளிக்கும்.
தேனி மாவட்டத்தில் இந்த மாதிரி வேலை உயர்த்துவதற்கு பணிசெய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். உறுதியாக வரும் ஆண்டில் ஏதோ ஒரு வகையில், இங்கே ஒரு சிறப்பான முயற்சி எடுத்து இங்கே பணி வாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொடங்க முயற்சி எடுக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் புதுப்புது திட்டங்களையும் புதுப்புது முயற்சிகளை நம் முதலமைச்சர் எடுத்து வருகிறார். அதன்படி, ஐடி துறையில் இன்னும் சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவிப்போம். அதில், பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பணி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்.
இதையும் படிங்க: "குடியரசு தினத்தில் மாவட்ட ஆட்சியர் விருதுகளுக்கு அரசாணை இல்லை" ஆர்டிஐ மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!