சென்னை: அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குனர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது, “பொறியியல் படிப்பில் கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு ஒதுக்கி இடங்களில் மட்டும் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 706 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நிர்வாக ஓதுக்கிட்டு சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை தனியாக உள்ளது.
உயர்வுக்கு படி திட்டம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் வரும் 23ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாக சேரலாம். ‘உயர்வுக்குப் படி’ திட்டத்தின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்கள் பாலிடெக்னிக்கில் சேர்வதற்கும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஐடிஐ சேருவதற்கான அறிவுரைகளை எடுத்து வைத்துள்ளோம்.
எனவே, உயர்வுக்கு படி திட்டத்தின் மூலம் இம்மாதம் 23ஆம் தேதி வரை மாணவர்கள் சேரலாம். கல்லூரியில் காலியிடம் இருந்தால் மாணவர்கள் வராண்டா அட்மிஷன் மூலம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ.1000 மற்றும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்பதையும் எடுத்து கூறியுள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்" - தீர்மானம் நிறைவேற்றிய திமுக மூத்த அமைச்சர்!
கல்லூரிகளில் முறைகேடு விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மூலம் நடைபெறுகிற பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் போலியாக பேராசிரியர்கள் கணக்கு காட்டிய விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை பெற்ற பின்னர் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இருமொழி கொள்கை: இருமொழி கொள்கை இன்று, நேற்று வந்ததில்லை. 1967களில் இருந்து இருமொழி கொள்கை இருக்கிறது. உதாரணமாக பிரசிடென்சி கல்லூரியில் இந்தி பாடப்பிரிவில் 3 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவற்றை நடத்த முடியுமா? மேலும், மலையாளத்தில் 4 மாணவர்கள் மற்றும் உருது பாடப்பிரிவில் எவரும் சேரவில்லை. ஆனால், இந்த பாடங்கள் கல்லூரியில் உள்ளது.
மத்திய அரசு நிதி நிறுத்தம்: தமிழகத்தில் மாணவர்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகின்றனர். மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஆங்கிலுமும், தமிழும். மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் படிப்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை. இதற்காக மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறைக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்குரிய நிதியை நிறுத்தி இருப்பது அரசியலுக்காக தவிர கல்வி வளர்ச்சிக்காக அல்ல” இவ்வாறு அவர்தெரிவித்தார்.