சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பொன்முடி, “தமிழக அரசு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உள்ளிட்டவைகளால் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீடு காரணமாக கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே உயர்கல்வி விகிதம் 52 விழுக்காடு என தமிழகத்தில் உயர்ந்துள்ளது.
ஜூலை 22ஆம் தேதி முதல் தொடங்கும் கலந்தாய்வில் முதலில் விளையாட்டு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வும், பின்னர் மற்ற பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும். எது நடந்தாலும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படும்.
தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். மேலும், காலி இடங்கள் இருந்தால் வரான்டா அட்மிஷன் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள கூறி உள்ளோம். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 1,000 ரூபாய் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேலம் மாணவி சாதனை!