சென்னை: சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத் துறையின் அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், "அரசின் திட்டங்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு, நிவாரணத் தொகை வழங்குதல் போன்ற சிறப்பு அறிவிப்புகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியினையும் செய்து வருகிறது. கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @OfficeOfKRP pic.twitter.com/nRSA90RdRn
— TN DIPR (@TNDIPRNEWS) August 27, 2024
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவு அமைப்புகளில் அங்கத்தினர்களாக உள்ள விவசாயிகள், சிறு வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையின உறுப்பினர்கள் மற்றும் நகைக்கடன் பெறும் இணை உறுப்பினர்கள் விரைவாகவும், எளிதாகவும் கடன் பெற்றிட இணைய வழிக் கடன் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும்.
இதன் மூலம் இளைய தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் காலவிரயமின்றி உடனடி வங்கிச் சேவை பெறுவது உறுதி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. கூட்டுறவுத் துறையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு கூட்டுறவு (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகை கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொதுமக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில் இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், கடன் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணையவழி சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியில் சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சங்கம்: சங்கம் என்ற பகுதியில், பொது மக்கள் தங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் அமைந்துள்ள விவரங்களை தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
வங்கி சேவை: வங்கி சேவை பகுதியில் பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முகவரியினை தெரிந்து கொண்டு வங்கியினை தொடர்பு கொள்ள வங்கியின் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் மற்றும் மின் அஞ்சல் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வங்கி சேவை பகுதி: வங்கி சேவைப் பகுதியில், கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விவரங்கள், வழங்கப்படும் கடன் உச்ச அளவு, திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச கால அளவு, வட்டி விகிதம், கடன் வழங்கும் காரியம் போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர் நாள் : பணியாளர் நாள் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இசேவை : இசேவை என்ற பகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்களின் முகவரி, அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுகா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் இருப்பிட விவரத்தினை தெரிந்துகொண்டு பயன் பெறலாம்.
மருந்தகம் : மருந்தகம் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்களின் விவரங்களை, அவர்களது மாவட்டம் மற்றும் நிறுவனத்தின் பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் பொது மக்கள் அவர்களது பகுதியில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களை தெரிந்து கொண்டு, 20 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன் பெறலாம்.
தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கிடங்குகளின் முகவரி மறறும் அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய உறுப்பினர்கள் கிடங்கு வசதியினை குறைந்த வாடகையில் பெற்று பயன் பெறலாம்.
நியாய விலைக்கடை : நியாயவிலைக் கடை என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகள் விவரங்கள் அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுகா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடை முகவரி, தொலைப்பேசி எண் விவரங்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "மக்களுக்கான சேவைகளை வழங்கும் துறையாக இந்த துறை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கூட பல்வேறு வகையான கடன்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சரின் இலக்கு நிர்ணயித்து இருந்தார்.
கூட்டுறவு சங்கங்களின் வங்கிகள் காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் விரும்பு வகையில் செயலிகள் மூலம் கொண்டு சேர்க்க சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளை தொடங்க இளம் தலைமுறையினரும், புதிய வாடிக்கையாளர்களும் முனைப்பு காட்டுகிறார்கள்.
நியாய விலைக் கடைகளில் தொடங்கி, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வரை நவீனமயமாக்குவது இந்த ஆண்டின் இலக்காக உள்ளது. முதலமைச்சரை பொருத்தவரை செய்யப்படும் அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் அதனால் அந்த மக்களுக்கு திட்டங்கள் பலன்களை சேர்க்க வேண்டும் என உறுதியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் எந்த துறைக்கும் இல்லாத கூடுதல் சிறப்பு ஒரு தொடர்பு பொதுமக்களோடு கூட்டுறவுத் துறைக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்கள் மாதம் சென்று சேர்கிறது.
அதேபோல் அரசு சார்பில் அறிவிக்கப்படும் சிறப்பு திட்டங்களை கொண்டு சேர்க்க முடிகிறது. நெருக்கடி காலங்களாக உள்ள மழை, வெள்ள நேரங்களில் எல்லாம் அதற்கு தேவையான நிவாரணங்கள் இந்த துறையின் மூலம் சென்று சேருகிறது.
35 ஆயிரம் கடைகளை நவீனமயமாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. அது விரைவுப்படுத்தப்படும். அனைத்து கடைகளிலும் கியூஆர்கோடு அமைக்கும் செயல்முறை விரைவுப்படுத்தப்படும். நகையின் விலை, ஏற்ற இறக்கமாக உள்ளது. நகையின் மதிப்பீட்டில் 75 சதவிகிதம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மிடம் உள்ள பொருட்கள் எலிகள் போன்றவைகளால் கவரும் பொருள்களாக உள்ளது. அவற்றை பாதுகாக்க உயரமாக இருக்கும் இடத்தில் வைக்க வேண்டியுள்ளது. அதை நவீன மையப்படுத்தினாலே இது போன்ற சேதாரங்களை தடுக்கலாம்.
இந்த ஆண்டு 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் கொள்முதல் செய்வதை உணவுத்துறை செய்யும் விநியோகிக்கும் பணியைத்தான் கூட்டுறவு துறை செய்கிறது. ஒரு லட்சமாக இருந்த கல்விக்கடன் இன்று 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதை உணவுத்துறை தரப்பில் செய்து வருகிறோம். தகுதி உடைய அனைவருக்கும் வழங்கப்படும்" என கூறினார்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு; சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? - BJP Petition to ban formula 4 race