சென்னை: சென்னை ஐஐடியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன 5G டெஸ்ட்பெட் புராஜக்ட் மற்றும் 5 நெட்வொர்க்கின் டெமான்ஸ்ட்ரஷனை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா இன்று பார்வையிட்டார்.
இதில், சென்னை ஐஐடி 5G டெஸ்ட்பெட் ஆராயாச்சியாளர்கள், நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பேஸ் ஸ்டேஷன்(Base station) மற்றும் தொழில்நுட்பத்தை உபயோகித்து அதி விரைவு கம்யூனிகேஷன்ஸின் (குளோபல்) செயல் விளக்கத்தையும் செய்து காட்டினர்.
உலகிற்கு முன்னோடியாக திகழும் இந்தியா: அதனைத்தொடர்ந்து, ஐஐடியில் மாணவர்களிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா பேசியதாவது, “ 4 ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது இந்தியா உலகைப் பின்பற்றியது. அதே நேரத்தில் 5 ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. ஆனால், தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக 6 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழும்.
1993 ஆம் ஆண்டில் செல்போன் அறிமுகமானபோது இந்தியாவில் முதன்முதலாக 6 நகரங்களில் மட்டுமே அது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இந்திய அளவில் 117 கோடி செல்போன் செயல்பாட்டில் உள்ளது. இணையதள இணைப்புகளை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25 கோடி இணைப்புகள் இருந்தன. தற்போது அது 97 கோடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ரைலம் அமைப்பின் கெளரவ உறுப்பினரான சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திர கெட்டு
பாரத் நெட் திட்டம்: 10 ஆண்டுகளுக்கு முன்பு அகண்ட அலைவரிசை இணைப்புகள் இந்தியாவில் 6 கோடியாக இருந்தது. தற்போது 94 கோடி இணைப்புகள் உள்ளன. பாரத் நெட் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் கிராமப்புறங்களில் இணையதள இணைப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புரட்சிகரமான திட்டத்தின் காரணமாக இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக மாறும்.
என்ஐஆர்எஃப் (NIRF) தர வரிசையில் சென்னை ஐஐடி இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. மாணவர்கள் தங்களது கல்விக்குப் பின்னர் வாழ்க்கையை தொடங்கும்போது, படித்த நிறுவனத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ள வகையில் பங்காற்ற வேண்டும். 5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. நகர்ப்புறப் பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் பரவியுள்ளது.
இந்தியாவை தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது அதற்கான கட்டமைப்புக்களை உருவாக்கும் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசுகையில், “உயர் கல்வி நிறுவனங்கள் விக்சித் பாரத்(Viksit Bharat) 2047-க்கு புதிய காலத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றன” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்