சென்னை: சென்னை எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையில் 39வது கண் தான இரு வார விழாவில், கண்தானம் செய்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“எழும்பூர் அரசு கண் மருத்துவமனை ஆசியாவின் பழமையான மருத்துவமனை. உலகின் 2வது பழமையான மருத்துவமனை. 13 வயது சிறுவனுக்கும், 70 வயது பெண்மணிக்கும் வெற்றிகரமாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பையும், அரசாணையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் 249 பேர் தற்போது வரை உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து 42 கண்கள் இதுவரை தானமாக பெறப்பட்டுள்ளV. தேசிய அளவில் 25 சதவீதம் கண்விழிகள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பெறப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,25,634 கண் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளV. வருடத்திற்கு 1,000க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டும் இதுவரை 6,750 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்” என்றார்.
பின்னர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர்,“அதிமுக காலத்தில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர் என்பதற்காக 116 மருத்துவர்களுக்கு இடமாற்றம் கொடுத்தனர். எந்த அரசும் மருத்துவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை எடுத்ததில்லை. அந்த 116 பேர் பணியிட மாற்றம் செய்ததன் எதிரொலியாக அதில் ஒரு மருத்துவர் மனஉளைச்சல் காரணமாக உயிரிழந்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2,000 மருத்துவப் பணியாளர்களை முறையாக பணியில் அமர்த்தவில்லை. ஆனால் தற்போது முதல்முறையாக பணி ஆணை பெறுபவர்களிடம் விருப்ப கலந்தாய்வு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் மருத்துவர்களுக்கு எந்த பகுதியில் பணி வேண்டும் என்று கேட்டு அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுகிறோம்.
மருத்துவத் துறையில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என பலர் பணியமற்றப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 6,744 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 36,000 பேருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் மருத்துவத் துறை பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்களை, கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் அவரும் அமைச்சர்களும் எந்தெந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்ற விவரங்களையும் அவர் தெரிவிக்க வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும் பேசிய அவர், “இந்த ஆண்டு மட்டும் 12,120 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை டெங்குவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருந்தக ஆய்வகங்களில் பரிசோதனை முடிவுகள் தவறாக இருக்கும் என எண்ணும்பட்சத்தில் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: காகா..காகா.. மரத்தில் சிக்கிய காகத்தை பத்திரமாக மீட்ட தீயணைப்புப் படை வீரர்கள்!