சென்னை: முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன், சென்னையில் உடல்நலக் குறைவினால் காலமானார். 1940ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த பத்மநாபன், 1959ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவத்தில் சேவையாற்றிய அவர், கடந்த 2002இல் ஓய்வு பெற்றிருந்தார். ராணுவத்தில் இணைந்து முதலில் பீரங்கி படைப் பரிவில் நியமிக்கப்பட்டார்.
பின்னர், 1977ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை கசாலா மலை படைப்பிரிவுக்கு கமாண்டராக நியமிக்கப்பட்டார், பின்னர் அவர், தியோலாலியில் உள்ள பீரங்கி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். மேஜராக இருந்த அவர், 1983 முதல் 1985 வரை மலைப்படை பிரிவின் கர்னல் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
தனது திறமையால் தொடர்ந்து உயர் பதவிக்கு உயர்ந்தார். குறிப்பாக, 1988ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை ராஞ்சி, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய ஆகிய இடங்களின் படைப்பிரிவிற்கு தலைமை தாங்கிய அவர், 1992ஆம் ஆண்டு பஞ்சாப் படைப்பிரிவிற்கு ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
அவர் 1993ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் 15 கார்ப்ஸின் ஜெனரல் அதிகாரியாக பதவி வகித்திருக்கிறார். இந்த காலத்தில், காஷ்மீரில் தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டுவந்து சாதனை படைத்தார். சுந்தரராஜனின் ராணுவ யுக்தியைப் பாராட்டி, இவருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், விஷிஸ்ட் சேவா பதக்கம், பொது சேவை பதக்கம், சங்கராம் பதக்கம் மற்றும் 25வது சுதந்திரப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும், இவர் ராணுவத்தில் பல துறைகளில் சிறந்து விளங்கியவர், கடந்த 2000ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி உயர்ந்தார். இரண்டாண்டு காலம் இந்த பதவியில் இருந்த அவர், 2002ஆம் ஆண்டு பதவி ஓய்வு பெற்றார். ராணுவ வாழ்க்கையில் தான் சந்தித்த பல்வேறு சவால்கள் குறித்தும், ராணுவம் குறித்தும் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்தியன் மிலிட்டரி பிஃக்ஷன் (Indian military fiction) மற்றும் ரைட்டிங் ஆன் தி வாள் (Writing on the wall) ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் குடியேறினார். பின் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அவர் சென்னையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு இந்திய ராணுவத்தினர், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா ஆஜர்