சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உயர் கல்வித்துறையின் கீழ் இருக்கும் 13 பல்கலைக்கழகங்களில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்னாதன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, கொடைக்கானல் அன்னை தெரேசா பல்கலைக்கழக துணை வேந்தர் கலா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், சென்னை திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம். ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை, மதுரைக் காமராஜர், பாரதியார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் இல்லாத காரணத்தால் அந்த பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உயர் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வி இயக்க ஆணையர் ஆப்ரகாம், கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் உள்ளிட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி பற்றாக்குறை குறித்து துணைவேந்தர்கள், அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் தணிக்கை தொடர்பான விபரங்களையும் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் வழங்கினர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிதிப் பற்றாக்குறையை களைவது குறித்தும், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை சரி செய்வது குறித்தும் தீவிரமாக விவாதித்தார்.
பின் தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உயர்கல்வித் துறையால் தயாரித்து வழங்கப்பட்ட பாடத்திட்டத்தில், குறிப்பிட்ட பகுதியை கடைபிடிக்க வேண்டும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கால அட்டவணைகளை கொண்டு கல்லூரிகளை நடத்த வேண்டும், மாணவர்களுக்கான மதிப்பெண்களை அளிக்கும் முறையையும், அவற்றை பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் முறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இதில் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும், முனைவர் படிப்புகளுக்கான தரத்தை உயர்த்த வேண்டும், பல்கலைக்கழகங்களுக்கான சிறந்த அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் நிதிச்சுமை காரணமாக கல்வியின் தரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் நிதிச்சுமை குறித்து முதல்வரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள 74 ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நீக்கம் செய்யக் கூடாது எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லையா? - இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்!