தூத்துக்குடி: திமுக சார்பில், கோவில்பட்டி சர்க்கஸ் மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல ஒரு சிலர் என்னவென்று தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழகம் மற்றும் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார்கள். வீடு இல்லாதவர்களைக் கண்டறிந்து, எட்டு லட்சம் பேர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு இந்த ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள 'கனவு இல்லம்' திட்டம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம். கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது, தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசுதான், பழைய திட்டங்களுக்கு எல்லாம் புதிய பெயர்களை வைத்துள்ளது. வரலாறு திருத்தப்படுகிறது, வரலாறு மாற்றி அழிக்கப்படுகிறது.
காந்தியை நாம் மகான் என்கிறோம். ஆனால், அவர்கள் வேறு கதை சொல்கின்றனர். பொய் சொல்லி பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். தமிழக மக்களிடம் உங்கள் பருப்பு வேகாது. இங்குள்ள மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்.
ஊட்டச்சத்து உறுதிப்படுத்தல் என்ற திட்டம், முழுக்க முழுக்க தமிழக அரசு நிதி. அதையும் மத்திய அரசு நிதி என்று கூறுகிறார் அண்ணாமலை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றாக வடை சுடுகிறார். உங்கள் பொய்களை மக்கள் யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. நிச்சயமாக இந்த முறை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அதிமுக, பாஜகவிற்கு அடிமை ஆட்சி நடத்தியது. பிரதமர் மோடிக்கு நன்கு ஜால்ரா போட்டனர். என்ன செய்தாலும், உள்ளேன் ஐயா என்று கூறி தலையாட்டிக் கொண்டிருந்தனர். ஜெயலலிதா இருந்தபோது கொண்டு வர முடியாத மத்திய அரசு திட்டங்கள், அவர் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன.
இன்றைக்கு அதிமுக பசு தோல் போர்த்திய புலி போல, பசப்பு வார்த்தைகளைப் பேசி வருகின்றனர். நம்முடைய உரிமைகளை அடகு வைத்து, தமிழர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு கையெழுத்து போட்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு சரியான பாடம் கற்றுத் தருவார்கள், மக்கள். மீண்டும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி எம்.பி போட்டியிட முதலமைச்சர் வாய்ப்பு தருவார் என நம்புகிறோம்.
எதிர்கட்சிகள் இருக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். திமுகவை மோடி மட்டுமல்ல, உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது, திமுக. 6 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது, மத்திய அரசு. எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியும், அண்ணாமலையும் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
கல்விக்கடன், விவசாயக் கடன், மகளிர் கடன் ஆகியவற்றை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக பெரும் ஊழல் செய்துள்ளது. 90 சதவிகித நிறுவனங்கள் பாஜகவிற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளன. கரோனா தடுப்பு ஊசி தயாரித்த சீரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பாஜகவிற்கு நிதி அளித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டையே விற்று திங்கக்கூடிய ஒரு கூட்டம் ஆட்சி நடத்தி வருகிறது. அந்தக் கூட்டம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு