சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிற்றரசு உட்பட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "தன்னைவிட தன் பிள்ளை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கிறார்கள். வளர்ந்த பிறகு பெற்றோர்களை காப்பாற்ற வேண்டிய கடமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உள்ளது. வயதானவர்கள் சாப்பிட்டியா தூங்கிட்டியா என்று கேட்க ஒரு ஆள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எந்த முதியோராக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பது நமது கடமை. முதியோர் பராமரிப்பு மையங்கள் அதிகரிக்க கூடாது என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம், பராமரிப்பு இல்லத்தை நாம் குறைத்திட வேண்டும். இன்று எடுத்த உறுதிமொழியை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் பெண்களைப் படிக்கவே விடமாட்டார்கள், வகுப்பறையில் 50 பேர் இருந்தால் அதில் இரண்டு பேர் தான் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் படிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பெரியார் அதற்க்கு பிறகு அண்ணா, கலைஞர், அதன் பிறகுதான் மகளிர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
தற்போது முதலமைச்சர் பெண்களுக்கு பல திட்டங்களை வடிவமைத்து வருகிறார். தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். அனைத்து உதவி எண்களையும் பெண்கள் தெரிந்து கொண்டு வைத்து இருக்க வேண்டும்" என பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசியது: தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பெண்களின் உயர்கல்விக்காக வழங்கப்படும் புதுமைப்பெண் திட்டம் மூலம் ஆண்டுக்கு மூன்றே கால் லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். 9ஆம் தேதி கோவையில் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்கள். திட்டங்களை மட்டுமல்லாமல் உரிமைகளை நிலைநாட்ட கூடிய விழிப்புணர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பள்ளிச் சீருடைகள் தாமதமாக வழங்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரியாமல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். சில பள்ளிகளில் அளவு சரியாக இல்லாமல் இருந்ததாக புகார்கள் வந்தன. தையல் சொசைட்டியில் உள்ள பெண்கள் நேரடியாக பள்ளிகளுக்குச் சென்று அளவெடுத்து சீருடைகள் தைப்பதால் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தரமாகவும், பிரத்யேகமாகவும் அளவெடுத்து தைப்பதால் 15 முதல் 20 நாட்கள் காலதாமதம் ஆகிவிட்டது. இந்த மாதத்திற்குள் நான்கு செட் பள்ளிச் சிறுவடை வழங்கி விடுவோம். குழந்தை திருமணம் தொடர்பாக தற்போது புகார் வருகிறது. அதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கோவையை வட்டமிடும் பன்னாட்டு போர் விமானங்கள் : வரலாற்றில் முதன் முதலாக நிகழும் கூட்டுப்பயிற்சி