சென்னை: பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுகவின் தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் எ.வ.வேலு , மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டனர்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த ஆண்டு சிறப்பான முப்பெரும் விழா ஆண்டு. திமுக தோற்றிவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. எனவே திமுகவின் பவள விழா ஆண்டு இது. அதனை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கு அமைக்கப்படுகிறது.
விழா அரங்கைச் சுற்றிலும் 50 அடி உயரத்தில் திமுக கொடிகள் பறக்க, விழா மேடைக்கு வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வண்ணமய விளக்குகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மேலும் அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கும் , நிர்வாகிகளுக்கும் தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மேடை, விழாப் பந்தல் உள்ளிட்டவற்றை பார்வையிடுவது பொதுப்பணித்துறை அமைச்சர் முறை என்ற அடிப்படையில் எனது கடமை.
நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை திடீரென சென்று பார்வையிடுவதுதான் முதல்வரின் வழக்கம். செப்டம்பர் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் கூட இங்கு பார்வையிடக் கூடும்" என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.