சென்னை: திமுகவின் 75வது ஆண்டு பவள விழா மற்றும் பெரியார், அண்ணா, ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் விழா என 3 விழாக்களையும் ஒன்றாக சேர்த்து முப்பெரும் விழாவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினர்.
தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசியதாவது, "தகுதியான விருதாளர்களை கருணாநிதி போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேடிப் பிடித்து கண்டறிந்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 75 ஆண்டுகள் ஆகிறது. நம் பாட்டன் கட்சியைச் சேர்த்து பார்த்தால் 100 ஆண்டுகள் ஆகிறது.
ஒரு இயக்கம் 100 ஆண்டுகள் வேறு வேறு பெயர்களிலிருந்தாலும், கொள்கை மாறாமல் இருப்பது இந்த கட்சி மட்டும் தான்.
எத்தனையோ நாடுகளில் எத்தனையோ விதமான போராட்டங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக, வேலை கேட்டு போராட்டம், குடியாட்சி கேட்டு போராட்டம், சோற்றுக்காக போராட்டம், நில வரிக்காக போராட்டம் என எத்தனை விதமான போராட்டங்கள் நடந்துள்ளது.
ஆனால், சுயமரியாதைக்காகப் போராடிய ஒரே இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம் தான். அந்த சுயமரியாதையை தொடர்ந்து காப்பாற்றி வந்துள்ளோம். திராவிட இயக்கம் என்ன சாதித்தது என கேட்டால்? இடுப்பிலிருந்த துண்டை தோளில் போட வைத்தது, கோயிலுக்குள் நுழைய செய்தது, வேட்டி கட்ட வைத்தது.
மேலும், இந்த இயக்கம் தான் முதலமைச்சர் ஆகவும், அமைச்சராகவும் இருக்கச் செய்தது. இவையெல்லாம் திராவிட இயக்கம் செய்த மகத்தான காரியங்கள் ஆகும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அன்று இந்தி திணிப்பு செய்யப்பட்டது போல இன்று மீண்டும் கேட்கிறார்கள், இருமொழி கொள்கையை எடுத்துவிடுங்கள் என்று. அன்றைக்கு எந்த சாதி கோலோச்சி இருந்தாக கூறினோமோ, அதே சாதி மறைமுகமாகப் பல வேலைகளைச் செய்கிறது.
சமீபத்தில் மத்திய அரசு இந்திய வரலாற்றை திருத்தி எழுத ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இதுவரையில் திராவிட நாடு என சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த கமிட்டி ஆரிய நாகரிகம் என்று கூறுகிறார்கள். இந்த கமிட்டியில் உள்ள 17 பேரில் 3 பேர் அரசு அதிகாரிகள், மீதமுள்ள அனைவரும் பிராமணர்கள்.
இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் கமிட்டியில் அத்தனை பேருமா பிரமாணர்களாக இருப்பார்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதே போக்கை பாஜக செய்யுமானால், திமுக தனது வீரியத்தை காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. அதற்காக இளைஞர் பட்டாளங்களை உதயநிதி திரட்டிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் என்னைவிட நீங்கள் இளையவர்தான், ஆனால் இன்று நீங்கள் அடைந்திருக்கும் புகழ் எங்கேயோ போய்விட்டீர்கள். நீங்கள் எங்களின் ரட்சகர், திமுகவின் கர்த்தா" என்றார்.
இதையும் படிங்க: அதிகாரத்தில் பங்கு சர்ச்சை.. காஞ்சிபுரத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சிகள்!