சென்னை: சென்னை மதுரவாயல் காரம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 2000 பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் எந்த ஒரு தேசிய கட்சியும் மாநிலக் கட்சியும் பெற முடியாத வெற்றியை திமுக பெற்றிருப்பதாக கூறினார். குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பி ஆன டி.ஆர் பாலு ஏறக்குறைய 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக குறிப்பிட்டார். இது போன்ற வாக்கு வித்தியாசம் எல்லா தொகுதிகளிலும் திமுகவிற்கு கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், வட இந்தியாவில் உள்ள எம்பிக்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றவர்கள் என்று சுட்டிக்காட்டினார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை போலவே 40க்கு 40 வென்று காட்டி சாதித்து விட்டதாகப் புகழாரம் சூட்டினார்.”
அடுத்தாக பேசிய அமைச்சர் துரைமுருகன், “கலைஞர் எனக்கு தந்தை போல எனவும் என்னை வளர்த்தவரும் அவர்தான் என்றும் ஒருமுறை எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. விடிந்தால் அறுவை சிகிச்சை என்ற நிலையில் இரவு முழுவதும் என்னுடன் தங்கிக் கொள்வதாகக் கலைஞர் கூறினார். அந்த நாளை நினைக்கும் போது தற்போதும் என் கண்கள் கலங்குவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சின்ன விஷயம் என்றாலும் அனைவரிடத்திலும் கருத்துக் கேட்கும் குணம் கொண்டவர் கலைஞர் எனவும் தனது அமைச்சரை ஒரு வார்த்தை சொன்னார் என்பதற்காகத் தலைமைச் செயலரை 12 மணி நேரத்தில் மாற்றிய தலைவர் கலைஞர் கருணாநிதி எனவும் இரண்டு குடியரசுத் தலைவர்களை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் அவர்தான் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக முதல்முறையாக ஒரு பெண் குடியரசுத் தலைவரை நியமனம் செய்ய காரணமாக இருந்தவர் கலைஞர் தான் என்றும் அவரைப்போன்ற துணிச்சல் மிக்க ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது எனவும் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நாம் பெற்ற பலன்" என புகழாரம் சூட்டினார்
இதையும் படிங்க: நீட் விலக்கு குறித்து இனி மத்தியில் பேச்சுகள் வரும்! - மா.சுப்ரமணியன் கூறுவது என்ன?