வேலூர்: தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (ஜன. 31) ஆய்வு செய்தார்.
அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னை அணைக்கட்டு, மேல்பாடி தரைப்பாலம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் ஆதாரத்தை பெருக்க வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாணியம்பாடியில் இருந்து ராணிப்பேட்டை வரை நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவதன் மூலம், பாலாறுகளில் நான்கு முதல் ஐந்து அடி வரை தண்ணீர் தேங்கி நீர் ஆதாரத்தை பெருக்க வழி வகுக்கும். இது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் இரு மாநில அரசுகளுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசும் தயாராக இருப்பதாக துரை முருகன் கூறினார்.
மேலும், "முல்லைப் பெரியாற்றில் 152 அடி வரை தண்ணீர் இருந்தது. அதன் பிறகு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி 132 அடியாக நீர் இருப்பு வைக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர். பின்னர் மூன்று கட்டங்களாக நீரை உயர்த்த வேண்டும் என கேரள அரசு தெரிவித்தது. மூன்றாவது கட்டமாக நீரை உயர்த்தும் போது அருகிலுள்ள பேபி அணை பலவீனமாக இருப்பதால், அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது.
பேபி அணை அருகில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அந்த மரங்களை அகற்ற வனத்துறை அனுமதி வழங்கவில்லை. அந்த மரங்களின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை உயர்த்துவதற்கான பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளேன்.
மேலும், மேகதாது அணையில் கர்நாடக அரசு எக்காரணத்தைக் கொண்டும் தடுப்பு அணை கட்ட முடியாது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஆய்வு செய்தாலும், அவர்கள் படம் வரைந்தாலும், அந்த திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலும், மத்திய அரசின் ஒப்புதலும் வேண்டும். அந்த மாநில அமைச்சர் தொகுதி என்பதால் கர்நாடக அமைச்சர் இதனை வேகமாக செய்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "இன்னும் எத்தனை தேர்தலுக்கு எய்ம்சை பயன்படுத்துவார்கள் என தெரியவில்லை" - மா.சுப்பிரமணியன் விமர்சனம்!