தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த அதி கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்து தேங்கியது. இந்த பெருவெள்ள நீரில் பொது மக்கள் பலர் தத்தளித்தனர்.
அப்போது, உடனடியாக பெரு வெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். அப்போது, எந்த பிரதிபலன் இல்லாமல் மக்களை மீட்ட மீனவர்களைப் பாராட்டும் விதமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கும் விழா தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் முற்றும் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்தினர்.
பின்னர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென மைக்கை பிடித்து, "கடலில் பிறக்க வைத்தாய் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தாய்" என்ற எம்ஜிஆர் படத்தின் பாடலை பாடினார். பின்னர் இதனை கேட்டு அங்கிருந்த ஒட்டுமொத்த மீனவர்களும் கைதட்டி விசிலடித்து கொண்டாடினர். மேடையில் இருந்த கனிமொழி எம்பி உள்ளிட்டவர்கள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடிய பாடலை ரசித்து கேட்டனர்.