சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்ககோரி மதிமுக அளித்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன என்பது தெரியாமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், அந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் செல்லும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "பாஜக தலைமையுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.."- கூட்டணி குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், தங்களது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், வேறு யாருக்கும் பம்பரம் சின்னம் ஒதுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில், தேர்தல் விதிப்படி முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பம்பர சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட அளவு வாக்குகளை வாங்காமல் உரிமையாக எப்படி தேர்தல் ஆணையத்திடம் பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆணையத்தின் முடிவு என்ன என்பது தெரியாமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு மார்ச் 07ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன காரணம்?