சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்திற்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், டாக்டர் சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனிடையே, அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். தனது பணியிடை நீக்க உத்தரவுகளை எதிர்த்து சுப்பையா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் வழக்கு; சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சுப்பையாவுக்கு எதிராக இது போன்ற புகார்கள் தொடர்ச்சியாக வருவதாகவும், இவரைப் போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டக்கூடாது எனவும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்று, சுப்பையாவின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் சுப்பையா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்