சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற 15 வயது சிறுவன், 2016ஆம் ஆண்டு வயிற்று வலி காரணமாக, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை கவனித்து வந்த தாத்தாவின் ஒப்புதலைப் பெற்று, சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் சீராகாததால் சேலம் அரசு மருத்துவமனையிலும், பின் கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்நிலையில், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும், தவறான சிகிச்சை அளித்த மேட்டூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரமேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவனின் தாய் சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த போது, மேட்டூர் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, சம்பந்தப்பட்ட மருத்துவர் என அனைத்து தரப்பினரும், சிறுவனுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
அதே போல, தவறான சிகிச்சை வழங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவும், முறையான சிகிச்சை வழங்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் சமர்ப்பித்த வீடியோக்களை சுட்டிக்காட்டி, சிறுவனுக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என்றும், அப்படி சிகிச்சை வழங்கியிருந்தால் சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை நம்பிக்கை தராததால் தான் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறி, சிறுவனுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஆறு வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தற்போது 22 வயதாகியுள்ள சிறுவன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு உரிய வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து, மாணவரின் கல்வித் தகுதி அடிப்படையில் உரிய அரசு வேலை வழங்குவது குறித்து மூன்று மாதங்களில் பரிசீலிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: “பல சார் பதிவாளர் அலுவலகங்களில் உரிய ஆவணங்கள் இருந்தும் மறுப்பு தெரிவிக்கின்றனர்” - உயர் நீதிமன்றம் வேதனை! - MHC Order For Sub Registrar