சென்னை: தமிழக காவல்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2016ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
இந்நிலையில், வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும், இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு செய்தியை நடராஜ் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீலா அளித்த புகார் மனு அடிப்படையில், நடராஜ் மீது மதக்கலவரத்தை தூண்டி விடுதல், அவமதித்தல், வதந்தி பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, முன்னாள் டிஜிபி நடராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டிஜிபி நடராஜ் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “தமிழக முதலமைச்சர் மீது தனிப்பட்ட மரியாதை கொண்டுள்ளதாகவும், தன் மீதான வழக்கு எதிர்பார்க்காத ஒன்று என்றும், அந்த வாட்ஸ்ஆப் தகவலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை தான் அங்கீகரிக்கவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அப்போது அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, இந்தப் பிரமாண பத்திரத்தை அதே வாட்ஸ்ஆப் குழுவில் பதிவிட்டு அதன் நகலை காவல்துறைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வருத்தம் தெரிவித்துள்ளதால் 24 மணி நேரத்திற்குள் பிரமாண பத்திரத்தை பதிவிட்டு உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவதூறு கருத்துக்கு வாட்ஸ்ஆப் குழுவில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பழனி கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிய வழக்கு; மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல்! - Palani temple encroachment case