சென்னை: பெற்றோர் குழந்தையைத் தனது பாதுகாப்பில் வைத்து வளர்ப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவானது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக மனுதாரர் தனது குழந்தையை நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்து வந்திருந்தனர். அதைத் தொடர்ந்து குழந்தையிடம் நீதிபதி பேசியபோது, "சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு வருவதாகவும், நீதிமன்றத்திற்கு வருவதற்காக வகுப்பிற்குச் செல்லவில்லை எனவும்" அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால் மனுதாரர் மீது கோபமடைந்த நீதிபதி கார்த்திகேயன், இதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்ய வேண்டாம் என மனுதாரரின் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியதுடன், இதுபோன்ற வழக்குகளை கருத்தில் கொள்ள வேண்டாமென நீதிமன்ற பதிவுத்துறைக்கும் அறிவுறுத்தினார்.
பின்னர் அந்த சிறுமியை அழைத்த நீதிபதி கார்த்திகேயன், சிறப்பு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது, தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் நிலை ஏற்பட்டதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தற்போது, சிறுமியிடம் மன்னிப்பு கோரிய நீதிபதி கார்த்திகேயனின் அந்த எண்ணம் அங்கிருந்தோரை நெகிழச் செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.