சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் தேர்வு நடைமுறைகளை ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பொறுப்பு துணை வேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக காலியாக உள்ள பதிவாளர் பதவியை நிரப்ப உத்தரவிடக் கோரி, புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பல்கலைக்கழகம் தரப்பில், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதிவாளர் தேர்வு செய்யத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விட்டதாகவும், இக்குழுவிடம் 64 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மக்களவை தேர்தல் அறிவிப்பு காரணமாக நேர்முகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, மே மாத இறுதிக்குள் நேர்முகத்தேர்வை நடத்த வேண்டும் எனவும், பதிவாளர் தேர்வு நடைமுறைகளை ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கு; விரைவில் குற்றப்பத்திரிகை.. காவல்துறை தகவல்! - KT RAJENDRA BALAJI CASE