தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீர்செய்வது தொடர்பான திட்டம் வகுக்க வேண்டும் என மாசு கட்டுபாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது.
இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதனால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு பிப்ரவரி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், ஆலை மூடப்பட்டுள்ளதால் மாசு ஏதும் ஏற்படவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டான்ஜெட்கோ டெண்டர் விவகாரம் : தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்!