நீலகிரி: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், ராட்சத மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ஆறாம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் சேவை துவங்கியது. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் பயணித்தனர்.