சென்னை: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்' என்று காவல்துறையால் அழைக்கப்படும் கூலிப்படையினரின் தாக்கம் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மக்களோடு மக்களாக கலந்துள்ள இந்த கூலிப்படை எப்படி உருவாகிறார்கள்? கொடூர கொலைகளை சர்வ சாதாரணமாக நிகழ்த்திவிட்டு தாமாக வந்து சரணடைவதன் நோக்கம் என்ன என்பதை குறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சத்யராஜ் ராஜமாணிக்கம் நம்மிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றை பார்க்கலாம்.
கூலிப்படையினர் யார்?: எந்தவொரு தனிப்பட்ட காரணங்கள் இன்றி, பணத்துக்காக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்தான் கூலிப்படையினர். பிறர் காசு கொடுத்து செய்ய சொல்லும் குற்றங்களை செய்வதே இவர்களது முழு நேர வேலை. அடிதடி முதல் கொலை வரை அந்தந்த அசைன்மெண்டுகளுக்கு ஏற்றாற்போல தொகையை பேசி வாங்கிக்கொள்வார்கள். மேலும், ஸ்கெச் போடப்படும் நபர்களுக்கு சமூகத்தில் அவர்களின் மதிப்பிற்கு தகுந்தாற்போல விலையும் உண்டு.
பொதுவாக இந்த கூலிப்படையினருக்கு வழக்குகளின் மீதும், தண்டனை குறித்தும் எந்தவித பயமும் இருக்காது. பணம் மட்டும்தான் இவர்களது ஒரே குறிக்கோள். தாங்கள் சிறைக்கு சென்றாலும், பேசிய தொகை தங்களது குடும்பத்துக்கு சென்றுவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கமாக உள்ளது. இவர்கள் ஒரு ரவுடியாகவோ அல்லது டானாகவோ பெயரெடுப்பதில் நாட்டம் காட்ட மாட்டார்கள். பெரும்பாலும் கூலிப்படையினரின் நெட்வொர்க் சிறையில் இருந்துதான் உருவாகிறது. இதுபோன்ற கூலிப்படையில் சிறார்கள்கூட இருக்கின்றனர்.
கூலிப்படையை வளர்ப்பது யார்?: சமூகத்தில் முக்கிய புள்ளியாக இருப்போர், அரசியல்வாதிகளில் ஒரு சிலர் தங்களது பெயர் கெடுவதையோ, வழக்குகளில் சிக்கவோ விரும்பமாட்டார்கள். எனவே, இவர்கள் தங்களது எதிரிகளை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவுகின்றனர். அதற்கு பெருந்தொகையை கொடுப்பதோடு, மறைமுகமாக நின்று வழக்கையும் பார்த்துக்கொள்கின்றனர். ஆனால், கைதாகும் கூலிப்படையினர், குற்ற சம்பவம் தொடர்பாக வரும் அனைத்து எதிர்வினைகளையும் அவர்களே ஏற்க வேண்டும் சட்ட விளைவுகள் உட்பட.
இதன் காரணமாகவே பெரும்பாலான கூலிப்படையினர் வழக்குகளில் தாமாகவே சரண் அடைவார்கள். சட்டத்தை சந்திப்பதிலோ, சிறைக்கு செல்வதிலோ இவர்களுக்கு எந்த கவலையும் இருக்காது. அதுதான் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் நடந்துள்ளது. ஆனால், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை கொலையாளிகள் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில்தான் காவல்துறை கொலை நடந்ததான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு குற்றவாளிகளின் அடையாளத்தை பெயருடன் குறிப்பிட்டு காட்டியுள்ளது.
கூலிப்படையை ஏவினால் என்ன தண்டனை?: கூலிப்படையினரை விட அவர்களை ஏவியவர் A1 குற்றவாளியாக சேர்க்கப்படுவார்களா என்றெல்லாம் சிலருக்கு கேள்விகள் எழலாம், அப்படியில்லை., ஒரு கொலையை செய்ய யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் பட்டியலில் வந்துவிடுவார்கள். பழைய ஐபிசி(IPC) சட்டத்தின்படி, கூலிப்படையை ஏவியவர் 'பிரிவு 120B' கூட்டுசதியில் சேர்க்கப்படுவார். புதிய ஐபிசி சட்ட பிரிவிலும் இது உள்ளது. இதுபோல, குற்ற பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்கவே கைதானவர்களை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்கிறார்கள்.
இதில், கூலிப்படையாக இருந்தாலும், காசு கொடுத்து செய்ய சொன்னவராக இருந்தாலும், இருவருக்குமே ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை கொடுக்க புதிய ஐபிசி சட்டத்தில் இடமுண்டு. குற்ற வழக்குகளில் கைதாகும் கூலிப்படையினர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட முடியாது. ஆனால், கூலிப்படையினரின் அடுத்தடுத்த குற்றங்களை தடுக்க வழி இல்லை. அவர்களது தொழிலே காசுக்காக சிறைக்கு போவதும், வருவதும்தான்.
குற்ற பின்னணியுடன் இருக்கும் இவர்கள் சமுதாயத்தில் எந்த வேலைக்கும் போக முடியாமல் காசுக்கு கொலை, கொலைக்கு சிறை என காலம் செல்கிறது. அதிலும் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் சிறிய தொகைக்காகக்கூட கொலை செய்த சம்பவங்கள் இருக்கின்றன'' என்றார் வழக்கறிஞர் சத்யராஜ் ராஜமாணிக்கம்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அடுத்தடுத்து சிக்கும் அரசியல் புள்ளிகள்.. ஆற்காடு சுரேஷின் தோழிக்கு வலைவீச்சு!