தருமபுரி: தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கருவுற்ற தாய்மார்களை குறி வைத்து சில கும்பல்கள் நடமாடும் ஸ்கேன் எந்திரம்மூலம் கருவில் உள்ள குழந்தையில் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த ஓராண்டில் மட்டும் கம்பைநல்லூர், காரிமங்கலம், ராஜா பேட்டை, பரிகம் உள்ளிட்ட பகுதிகளில் கருவில் உள்ள குழந்தையில் பாலினம் கண்டறியும் கும்பல்களை மருத்துவ துறையினர் கண்டறிந்து கைது செய்து, அவர்களிடம் இருந்து ஸ்கேன் கருவிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கும்பல் பென்னாகரம், நெக்குந்தி, முத்தப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் எந்திரம் மூலம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவது குறித்து சுகாதாரம் மற்றும் ஊரக நலத்துறை அதிகாரிகள் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து, அந்த கும்பலை பிடிக்க சுகாதாரத் துறையில் பணியாற்றும் பெண் செவிலியரை மாறு வேடத்தில் கும்பலை அணுக வைத்து அனுப்பி உள்ளனர். அப்போது, நத்த அள்ளி பள்ளியில் சமையலராக பணியாற்றும் லலிதா என்பவர் குழந்தை பாலினத்தை தெரிவிக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
மேலும், அவரை அணுகிய மாறுவேடத்தில் சென்ற சுகாதாரத்துறை பணியாளரை அழைத்துக் கொண்டு, நெக்குந்தி முத்தப்பா நகர் பகுதியில் மலை மீது உள்ள தனி வீட்டில் நடமாடும் ஸ்கேன் கருவி மூலம் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் கும்பலிடம் சென்றுள்ளார்.
பின்னர், சுகாதாரத்துறை அனுப்பிய நபர் கும்பல் பதுங்கி இருக்கும் இடம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அங்கு வந்து பதுங்கி இருந்த ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், அவர்களை கையும் கழுவுமாக பிடித்து அவர்களிடம் இருந்து ஸ்கேன் எந்திரம், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒருவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க 13 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளதும், ஐந்தே நிமிடத்தில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை அறிவித்து வந்ததையும் கண்டறிந்தனர். மேலும், இந்த சட்ட விரோத செயலில் ஈடுபடுவது, கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது.
முன்னதாக, முருகேசன் என்ற நபர் சட்ட விரோதமாக குழந்தையின் பாலினத்தை அறிந்து சொல்லும் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததும், அண்மையில் ஜாமீனில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பொய் சாட்சி சொல்லுமாறு மிரட்டும் தனிப்படை போலீசார்?.. ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்.. பொள்ளாச்சியில் நடப்பது என்ன?