சென்னை: அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா. முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, “நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றது. இந்தியா கூட்டணி அணியை முன்னெடுத்து செல்வதற்கு திமுக முயற்சி எடுத்து வருகிறது. இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லாத மாநிலம் தமிழ்நாடு.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை இந்திய கூட்டணி பெறும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முதன்மை செயலாளர் துரை வைக்கோ மிகப்பெரிய வெற்றி பெற்றார். அதில் திமுகவின் பங்கு மிகப் பெரிய அளவில் உள்ளது. திமுகவின் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் அனைவரும் சொந்த கட்சியினர் போன்று வேலை செய்து மிகப் பெரிய வெற்றியை தேடி தந்தார்கள்.
மத்திய பட்ஜெட் மிகப்பெரிய மோசடி. அது கானல் நீர் போன்றது, அவை ஓரவஞ்சனையாக செயல்படுகிறது.பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குஜராத் மீனவர்களுக்கு பாப்பு ஏற்பட்டால் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதுகாக்கிறது. தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைகள் என்பதை மத்திய அரசு மறந்துவிட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக எந்த ஆட்சி நடைபெற்றாலும் மேகதாது அணை கட்டியே தீருவோம் என நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால், நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் அணையை கட்ட முடியாது. மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி, கிருஷ்ணசாகர், மேட்டூர் அணைகளுக்கு தண்ணீர் வராது. குடிப்பதற்கு தண்ணீர் இருக்காது. தமிழ்நாட்டில் உள்ள 6-7 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும்.
பட்டியலின இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் கிடைத்த வெற்றி. திமுக அரசு சமூக நீதி பாதையில் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு பல ஆலோசனைகளை செய்து சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நியாயமாகவும், அனைவருக்கும் பொதுவாகவும் நடுநிலையோடு செயல்படுகிறது.
பாஜக ஆளாத பல மாநிலங்களில், பாஜக அரசு நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வரலாறு காணாத அளவில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு முறையாக கேரளாவிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் எதுவுமே இல்லை, தமிழ்நாட்டிற்கு நாமம் போட்டு விட்டார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் பலி.. மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய கோர சம்பவம்! - MP wall collapse deaths