கோயம்புத்தூர்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக நாளை மறுநாள்(மார்ச்.13) விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வரும் முதலமைச்சர் சாலை மார்க்கமாக பொள்ளாச்சி செல்ல உள்ளார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளலூர் பகுதியில் உள்ள மாநகராட்சிக் குப்பைக் கிடங்கைப் பார்வையிட்டு அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாகத் தீர்ப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கை முறையாக மேலாண்மை செய்யாததால், பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில் கோயம்புத்தூருக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளலூர் குப்பைக் கிடங்கைப் பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். இல்லையெனில், குப்பைக் கிடங்கின் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் கோயம்புத்தூரில் நலத்திடங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை மறுநாள் வருகை தர இருக்கிறார். வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சனையால் கடந்த 20 ஆண்டுகளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த பிரச்சனை முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்லவில்லையோ என ஏற்பட்டிருக்கிறது. அங்கு மக்கள் வாழ முடியவில்லை, குழந்தைகள் வசிக்க முடியவில்லை, மூச்சு விட முடியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் நாளை மறுநாள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்குப் பார்வையிட வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.
தமிழக முதலமைச்சர் வர வில்லையெனில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கின் முன், உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க இருக்கிறோம். முதலமைச்சர் வெள்ளலூர் குப்பைக் கிடங்கைப் பார்வையிட வர இருக்கிறார் என அறிவிப்பு நாளை காலைக்குள் வராவிட்டால் நாளை காலை முதல் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “மோடியை எதிர்த்தால் அது வாரிசு கட்சி”.. கார்த்தி சிதம்பரம் பேச்சு!