சென்னை: சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 மணி வரை தொடர்வதாக இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு. இந்த மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கடல் அலை அதிக உயரம் எழும்பும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி 2.5மீ, ராமநாதபுரம் 2.8மீ, நெல்லை, தூத்துக்குடியில் 2.6 மீ உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோஜ்மா நகர் முதல் தீர்த்தாண்டதானம் வரையும், தூத்துக்குடியில் பெரியதலை முதல் வேம்பார் வரையும், நெல்லையில் குட்டப்புளி முதல் கூடுதலை வரையும் கடல் அதிக உயர எழும்ப வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலம்பரைக்குப்பம் முதல் சின்ன நீலாங்கரை வரையும், திருவள்ளூரில் பழவேற்காடு முதல் ராயபுரம் வரை லேசான அலை எழுச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் என்றால் என்ன?: 'கள்ளக்கடல்' என்ற வார்த்தை தமிழகத்திற்கு புதிய வார்த்தையாக இருக்கிறது. ஏனென்றால், இந்த வார்த்தை தெற்கு கேரளா பகுதியில் உருவாகி உள்ளது. 'கள்ளக்கடல்' என்பது எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் திடீரென ராட்சச அலை உருவாகி சேதத்தை ஏற்படுத்தும்.
அதாவது திருடன் எப்படி முன்னறிவிப்பு எதுவுமின்றி வருவானோ, அதே போன்று கள்ளக்கடல் அலைகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென உருவாவதால் தெற்கு கேரளா பகுதியில் இந்த கள்ளக்கடல் என்ற வார்த்தை உருவாகியதாகக் கூறப்படுகிறது. இவை திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளத்தை போன்றது என்கின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய வழக்கு.. தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீசார்! - Dharmapuram Adheenam Case