தூத்துக்குடி: அமாவாசை தினம் என்பது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்குச் சிறந்த நாட்களாகக் கருதப்படுகிறது. குறிப்பாக தை மாதம் வரும் அமாவாசை மற்றும் ஆடி மாதம் வரும் அமாவாசை ஆகிய தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. மேலும் இந்த அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்று கருதப்பட்டுவருகிறது. இந்நிலையில் நீர் நிலைகள் உள்ள பகுதிகளான ஆற்றுப்பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர்கள் குவிந்துள்ளனர். கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், மற்றும் தர்ப்பபுள் வைத்து, பிண்டம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு 4.40 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், கோயில் அருகே அய்யா வைகுண்டர் அவதாரப் பதியும் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. வழக்கமாகக் கோயில் கடலானது அமாவாசை பௌர்ணமி தினங்களில் சுமார் இரண்டு நாட்கள் உள்வாங்கிக் காணப்படும். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலானது சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. மேலும் கடல் ஆனது அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது. இதனால் குழந்தைகள் பாறை மீது ஏறி விளையாடியும், சிலர் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.. புதுக்கோட்டை அருகே வினோத வழிபாடு!