திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவது வழக்கம்.
ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் முக்கிய மாதங்களில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும்.
ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரம் அன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரங்கநாதருக்கு நடத்தப்படும். இன்று மிகவும் விஷேசமான ஜேஷ்டாபிஷேகத்தின் போது காலை கருடமண்டபத்திலிருந்து எடுத்து வந்த தங்ககுடம் மற்றும் வெள்ளி குடங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எனப்படும் புனிதநீர் எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் தங்கக் குடமானது கோயில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டது. மேலும் வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோயில் அர்ச்சகர்களால் சுமந்து வரப்பட்டது. நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் ஊர்வலமானது சித்திரை வீதிகளின் வழியாக கோயிலுக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்யப்பட்டு, பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கிகள் சாற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கநாதரை தரிசனம் செய்தனர். திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி பெருமாள் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தைலக்காப்பு சாற்றப்பட்டிருப்பதால் இன்று முதல் 48 நாட்கள் பெருமாள் (மூலவர்) திருவடி சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
இதையும் படிங்க: "லால்குடி எம்எல்ஏவை அழைத்து சமாதானம் பேசியாச்சு"- அமைச்சர் கே.என்.நேரு பதில்! - lalgudi mla soundarapandian issue