திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய, அரசு சார்பில் நடத்தப்படும் நெட் (NET) அல்லது செட் (SET) எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் 'செட்' தேர்வை நடத்தி வருகின்றன.
கடைசியாக மதர் தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்திய நிலையில், தற்போது 2024ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
முதலில் இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக மே 15ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் செட் தேர்வில் பங்கேற்க சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 2-வது வாரம் இந்த தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போதுவரை அதிகாரப்பூர்வ தேர்வு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரை ஈடிவி பாரத் சார்பில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது. "செட் தேர்வு விண்ணப்பத்துக்கான கடைசி நாள் மே 15ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இந்த முறை செட் தேர்வில் பங்கேற்க சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஜூன் 7ஆம் மற்றும் 8ஆம் தேதி தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இருப்பினும், அதிகாரப்பூர்வ தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்வுக்கான ஏற்பாடுகள் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும். தேர்வு கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
அதாவது, தேர்வு கட்டணத்தைப் பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு 2,500 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) உள்ளிட்ட பிரிவினருக்கு 2 ஆயிரம் ரூபாயும், பட்டியலின வகுப்பினருக்கு 800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.