மயிலாடுதுறை: தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள மாசிலாமணிநாதர் கோயிலில் தரிசனம் செய்யச் சென்ற பொறையார் ரோட்டரி சங்கத் தலைவரும், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே விநாயகர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார், பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக பொறுப்பில் உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோசியமும் பார்த்து வந்துள்ளார்.
அருண்குமார் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழமை வாய்ந்த மாசிலாமணிநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, நேற்று இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண்குமார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அருண்குமார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
65 சதவீத காயங்களுடன் அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா அல்லது தொழில்முறை போட்டியால் நடைபெற்றதா என்பது குறித்து பொறையார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பஸ் ஸ்டாண்டில் தூங்கிய நபரிடம் செல்போன் அபேஸ் டூ பெண் காவலர் தற்கொலை முயற்சி வரை சென்னை குற்றச் செய்திகள்