சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மகாத்மா காந்தியை போல் யார் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் அவர் போன்ற வீரமும், தைரியமும் உள்ளதா என்ற கேள்வியை என்னை நானே பார்த்து கேட்டு கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லாம் ஏன் அரசியல் வருகின்றீர்கள்? வேண்டாம், அது சரி வராது என என்னிடம் பலர் சொன்னார்கள். மக்களை சந்திக்க எந்த மேடையாக இருந்தால் என்ன என்று அரசியலுக்கு வந்தேன். தற்போது நான் தோல்வியை தழுவினாலும் இது நிரந்தரமல்ல 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது மிக ஆபத்தானது. 2014-இல் இப்படி செய்திருந்தால் இன்று இந்தியாவின் நிலை என்னவாயிருக்கும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை" எனக் கூறினார்.
இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற நமது கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில், நமது தலைவர், நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள்… pic.twitter.com/c7RCBO266a
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) September 21, 2024
தொடர்ந்து பேசிய அவர், "புதிதாக அரசியல் களத்திற்கு வருபவர்கள் என அனைவருக்கும் இந்தியா சொந்தமானது. இந்தியாவில் நேர்மையான மாநிலம் தமிழ்நாடு தான். இந்த நாட்டை நடத்தி கொண்டிருப்பது நம் வரி பணம் தான். மத்திய அரசு வட இந்தியாவுக்கு கர்ணனாகவும் தமிழ்நாட்டிற்கு கும்ப கர்ணனாகவும் இருக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல்; சீமான், திருமாவளவன் சொல்வது என்ன?
மேலும், "தமிழ்நாடு பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியில் அனைவருக்கும் நாம் ஏன் அரசியலுக்கு வந்தோம் என்ற காரணம் புரிந்திருக்க வேண்டும். நான் அரசியலுக்கு வந்தது எனக்காக அல்ல எனது தொண்டர்களுக்காக அல்ல; நம் வரும் கால சந்ததியினருக்காக" என்றார்.
"மக்கள் எந்த பொறுப்பை நமக்கு கொடுக்கிறார்களோ அது ஏற்று தொண்டாற்ற வேண்டும். தற்போது நாம் 2026ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். நான் முழுநேர அரசியல்வாதி இல்லை என பலர் கூறுகிறார்கள். முழு நேர அரசியல்வாதி என எவனுமே கிடையாது. அப்படி பார்த்தால் 8 மணி நேரம் தூங்கும் அரசியல்வாதி யாரும் முழுநேர அரசியல்வாதி இல்லை. நான் எந்த தியாகமும் செய்யவில்லை. விரும்பி அரசியலிலுக்கு வந்திருக்கிறேன். முன்னுதாரணமாக காந்தியை வைத்து கொள்ளலாம். ஏனென்றால் என்னைப் பற்றி எனக்கு தெரியும் யாரும் எனக்கு விரோதிகள் கிடையாது" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்