சென்னை: திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைவதில் புதிய தகவல் ஒன்று இன்று (பிப்.18) வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் இருந்து ஒரு தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு பிரித்துக் கொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கோவை நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழா வரும் 21ஆம் தேதி ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார். ராகுல்காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் டெல்லியில் கமல்ஹாசன் பங்கேற்றதும், கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக நட்பு பாராட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக அரசிடம் அடகுவைத்த உரிமைகளை மீட்க அஞ்சும் அதிமுக - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி