மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஜன.27) காலையில் கிடா வெட்டி பிரியாணி சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் 89வது ஆண்டாக நடைபெறும் இந்த ஆண்டிற்கான பிரியாணி திருவிழாவிற்காகப் பக்தர்கள் ஒரு வாரம் முன்பே காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். மேலும் பெண் பக்தர்கள் பலரும் தங்களது இல்லங்களிலிருந்து எடுத்து வந்த தேங்காய், பழம், பூந்தட்டுகளைத் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சாமிக்குத் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
மதுரை,கள்ளிக்குடி வட்டம் வடக்கம்பட்டி உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் உள்ளது. இந்த முனியாண்டி கோயில் தமிழகமெங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோயில் திருவிழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.
இந்த கோவில் திருவிழாக்களில் சுமார் 200 ஆடுகள், 300 சேவல்கள் மக்கள் வேண்டுதல் நிறைவேற்றுதலின் பேரில் அவர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்துவர். இதனைப் பெரிய அண்டாக்களில் பிரியாணியாகச் சமைத்து, திருமங்கலம், கள்ளிக்குடி, வடக்கம்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த உணவினை பிரசாதமாக வழங்குவர். அதன்படி இன்று காலை 5 மணி முதல் கிராம மக்களுக்குச் சுட சுடப் பிரியாணி பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் சுமார் மூன்று நாட்களாக வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களும் விரதம் இருந்து இந்த பிரியாணி திருவிழா நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். இந்த முனியாண்டி கோயிலில் மக்கள் என்ன வேண்டிக் கொண்டார்களோ அந்த வேண்டுதல் நிறைவேற்ற பின்பு முனியாண்டிக்குக் காணிக்கையாக ஆடு சேவல் போன்றவை நேர்த்திக்கடனாக வழங்குவார்கள்.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் சென்னை, திருச்சி, சேலம், உட்படப் பல மாவட்டங்களிலிருந்தும் இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மக்கள் வருவது வழக்கம். நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற இந்த திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஆளுநர் பதவியை ஒழிப்போம்' என தேர்தல் வாக்குறுதி - இந்தியா கூட்டணிக்கு திருமாவளவன் கோரிக்கை