மதுரை: நாளைய தினம் நம் பாரத நாட்டின் 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும் இதற்காக தங்கள் இன்னுயிரை நீர்த்தவர்களையும் நாம் இந்த நாளில் நினைவு கூறுகிறோம் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களை விரட்டி, சுதந்திரச் சுவாசத்தைக் கடந்த 77 ஆண்டுகளாக நமக்கு சுவாசிக்கத் தந்தவர்கள்தான் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்.
மதுரை தியாகிகள் நினைவுச் சின்னம்: இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் முதலமைச்சருமான கர்ம வீரர் காமராஜர், கடந்த 1961-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் காந்தி ஜெயந்தியன்று மதுரையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவுத் தூண் ஒன்றை எழுப்பி, தனது கையாலேயே அதனைத் திறந்து வைத்தார்.
1942 ஆக.8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பலர் தங்களது இன்னுயிரை நீத்தனர்.
மேலும் மறுநாள் ஆக.9ஆம் தேதி, காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ஆம் நாளில், மதுரையிலுள்ள தியாகிகள் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
இதற்கு மதுரை மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் தியாகிகள், நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தின் அருகே, காந்தி நினைவு அருங்காட்சியகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள நினைவு வளைவுக்கு பக்கத்தில் இந்த நினைவுத் தூண் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
தியாகிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் கூறுகையில், "இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மதுரை மண்ணுக்கு முக்கியப் பங்கு உண்டு. காந்தியின் அரையாடை புரட்சி நிகழ்ந்த மண் இது. அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் தோற்றுவிக்கப்பட்ட தியாகிகள் நினைவுத் தூண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ஆம் நாள் மதுரையிலுள்ள தியாகிகள் ஒன்றுகூடி இந்த தூணுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அடையாளமாகவும் இந்தத் தூண் திகழ்கிறது. இது சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் மட்டுமே அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வருகை தரும் தியாகிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இந்தாண்டு வெறும் 3 தியாகிகள் மட்டும்தான் வருகை தந்தனர். நாள்தோறும் இந்தத் தூணைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் இதன் முக்கியத்துவம் தெரியுமா என்றால் கேள்விக்குறிதான். ஆகையால் இந்த நினைவுத் தூணின் அவசியத்தை, வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது மிகவும் அவசியம். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்
வரலாற்றுக் கடமை: இது குறித்து மதுரை அரசு அருங்காட்சியகத்தின காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் போற்றும் இந்த நினைவுத் தூணை அனைத்து மக்களும் போற்றிப் பாதுகாப்பது வரலாற்றுக் கடமை ஆகும். மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசும் கூட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் போராட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகம் ஒன்றை சென்னையில் உருவாக்கியுள்ளது.
இதற்கான முழு பணிகளையும் அரசு அருங்காட்சியகத்து மேற்கொண்டு செய்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களிலுள்ள தியாகிகளையும் அவர்களது ஆவணங்களையும் பெற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த முயற்சிகளைச் செய்து வருகிறது. இது ஒவ்வொருவரும் சொல்லிச் செய்வதல்ல. நமது ரத்தத்தில் ஊறிய கடமையாக எண்ணிக் கொண்டு செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனஅழுத்தத்திலிருந்து மனிதனை விடுவிக்குமா இசை? - ஆய்வில் வெளிவந்த அசத்தலான தகவல்!