மருத்துவமனைகளில் நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த கோரி மனு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - dialysis experts in tamil nadu - DIALYSIS EXPERTS IN TAMIL NADU
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரிய மனுவுக்கு, சுகாதார துறை பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published : Sep 23, 2024, 7:37 PM IST
மதுரை: மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா தலைமை மருத்துவமனைகளில் 7 டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களே நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. அதன் முக்கியத்துவம் கருதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, நீதிமன்றம் தகுதியான டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
அதன் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தரப்பில் டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. ஆனால், தற்காலிக அடிப்படையிலேயே அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 2050 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன.
இதையும் படிங்க: கருணாநிதியே போயிட்டாரு; அப்புறம் எதுக்கு பேனா சிலை? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு சிவி சண்முகம் பதிலடி!
மூன்று நபர்களுக்கு ஒரு டயாலிசிஸ் தொழில்நுட்பனர் வீதம் பணியமரத்தப்பட வேண்டும். ஆனால், போதுமானவர்கள் பணியமர்த்தப்படவில்லை. பயிற்சி மாணவர்களை டயாலிசிஸ் செய்ய பயன்படுத்துவதால், சில நேரங்களில் முறையாக ஊசி செலுத்தப்படாமல் நோயாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஆகவே தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர, போதுமான அளவு டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், சுந்தர்மோகன் அமர்வு, "நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வழக்கு தொடர்பாக தமிழக சுகாதார துறையின் முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்