- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மதுரை: ஒவ்வொரு ஆண்டும் மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் நாள் தேசிய தீயணைப்பு படையினர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச தீயணைக்கும் படையினர் நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
இந்த சிறப்பு நேர்காணலின்போது அவர் பேசியதாவது, "தங்களது பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களை நினைவு கூர்வதற்கு தேசிய அளவில் ஏப்ரல் 14ஆம் நாளையும், சர்வதேச அளவில் நினைவு கூர்வதற்கு மே 4ஆம் நாளையும் நாம் அனுசரித்து வருகிறோம். அதனை ஒட்டி பொதுமக்கள் தீ விபத்து தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு பெற வேண்டும்" என்று கூறினார். மேலும், தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.
காய்ந்த புல்வெளிகள்: கோடைகாலங்களில் அதிக வெப்ப நிலை காரணமாக காய்ந்த புல்வெளிப் பகுதிகளில் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டுள்ள இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்குறிப்பிட்ட பகுதிகள் தீ விபத்துக்கு ஏதுவானதாகும். ஆகையால், தங்களது வாகனங்களை இது போன்ற இடங்களில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கோடை வாசஸ்தலங்கள்: விடுமுறை காலம் என்பதால் குழந்தைகளோடு கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவது நல்லது. அதே போன்று ஷாப்பிங் மால்கள் செல்வதையும் தவிர்க்க வேண்டும். அதிகமான கூட்ட நெரிசல்கள் மேற்கண்ட இரண்டு இடங்களிலும் தற்போது இருக்கும். இங்கெல்லாம் எதிர்பாராத தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உயிரிழப்புகள் நேரலாம். ஆகையால் கூட்டம் குறைவான நாட்களில், நேரங்களில் இவ்விடங்களுக்கு செல்வது நல்லது.
தீ தடுப்பு சாதனங்கள்: சுற்றுலா தளங்களுக்கோ அல்லது ஷாப்பிங் மால்களுக்கோ செல்ல நேரிடும் போது நீங்கள் உள்ள இடங்களில் போதுமான தீத்தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவை அனைத்தும் பாதுகாப்பானதுதானா என்பதையும் உறுதி செய்வது அவசியம்.
இது போன்ற இடங்களில் உள்ள தீத்தடுப்பு சாதனங்களை பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியம். அவ்வாறு தெரியவில்லை என்றால் அங்கு அசம்பாவிதம் நிகழும் போது உடனடியாக அவசர வழிகளில் பாதுகாப்பான முறையில் அவ்விடத்தை விட்டு குழந்தைகளோடு அகன்று சென்று விட வேண்டும்.
அதேபோன்று ஏதேனும் மருத்துவமனைகளுக்கு செல்ல நேரிட்டால் அங்கு இது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் உள்ளனவா என்பதையும் பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். அங்குள்ள அவசரகால வழிகளை முன்னரே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
லிஃப்ட்டு: ஷாப்பிங் மால்கள் மருத்துவமனைகள் பல அடுக்குமாடி கட்டிடங்கள் ஆகியவற்றில் அவசர காலங்களின் போது லிஃப்டுகளை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் தீ விபத்து காலங்களில் முதல் நடவடிக்கையாக அங்குள்ள மின் இணைப்புகள் துண்டிக்கப்படும். அச்சமயம் லிஃப்ட்டுகள் இயங்காது. அந்த நேரத்தில் நீங்கள் உள்ளே பயணிக்க நேர்ந்தால் அதில் சிக்கி விட வாய்ப்பு ஏற்படும் . இதனால் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எல்பிஜி தீ விபத்துக்கள்: தற்போது எல்பிஜி தீ விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சரியான பராமரிப்பின்மையே. அவற்றை எங்கு வைக்க வேண்டும், எங்கு வைக்கக்கூடாது என்ற புரிதல் இன்மை காரணமாக இந்த விபத்துக்கள் நிகழ்கின்றன.
ஆண்டிற்கு ஒரு முறை குழாய், அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றை பரிசோதித்து பராமரிப்பது அவசியம். லீக்கேஜ்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டும். அதுபோன்று லீக்கேஜ்கள் ஏற்படும் போது பயந்து ஓடாமல் அந்த சிலிண்டரை பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து வைத்து விட வேண்டும்.
வீட்டிற்குள் இருப்பதை விட திறந்த வெளியில் அதற்கான ஆபத்து மிகவும் குறைவு. இதனை சரியான முறையில் அப்புறப்படுத்த முயற்சி செய்து பாருங்கள் அவ்வாறு இல்லாவிட்டால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது கேஸ் ஏஜென்சிக்கு உடனடியாக தகவல் அளித்து விடுங்கள்.
மதுரை மாவட்ட தீயணைப்பு நிலையங்கள்: மதுரை மாவட்டத்தில் மட்டும் 15 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றுள் மதுரை நகருக்குள் மட்டும் ஆறு நிலையங்கள் இயங்குகின்றன. விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் நமது தீயணைப்பு வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல தொடங்குகின்றன.
நகருக்குள் நிகழும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சற்று முன்பின் ஆகலாம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகமான தீ விபத்துகள் நடந்தன. இப்பொழுது நிறைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது.
தற்போது தொழிற்சாலை பகுதிகள், பல அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் வாகன தீ விபத்துகள்தான் அதிகம் நடைபெறுகின்றன. அவற்றிலும் குறிப்பாக மின்சாரம் மற்றும் எல்பிஜி ஆகியவை சார்ந்த விபத்துகளே அதிகம். இது பெரிதும் சவாலாகவே உள்ளது. பெரும்பாலும் தீபாவளி சமயங்களில் தான் குடியிருப்பு பகுதிகளில் தீ விபத்துக்கள் நிகழ்கின்றன. சராசரியாக ஓராண்டுக்கு மதுரையில் மட்டும் 600 முதல் 700 தீ விபத்துக்கள் நிகழ்கின்றன.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள், விஷ வண்டுகள் மற்றும் தேனீக்கள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அதிக அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நிகழும் தீ விபத்துகள் தான் பெரும்பாலும் அதிகமாக உள்ளன. அதற்குப் பிறகு தீ விபத்துக்கள் மிகக் குறைவாகவே நிகழ்கின்றன.
பெரிய தீ விபத்துக்கள்: மதுரை போன்ற பெரிய மாவட்டங்களில் வருடத்திற்கு சராசரியாக ஆறு அல்லது ஏழு மிகப்பெரிய தீ விபத்துக்கள் நிகழ்கின்றன. ஆனால், பிற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது மதுரை மாவட்டம் பெரிய அளவில் தீ விபத்துக்கள் நிகழாத பகுதியாகும்.
நாம் செய்ய வேண்டியது: பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களின் அவசர எண்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்ணான 112 என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நவீன கட்டுப்பாட்டறையைக் கொண்ட இந்த எண்ணுக்கு காவல் ஆம்புலன்ஸ், தீ விபத்து என அனைத்து அவசர உதவிகளையும் பெற முடியும். எந்த உதவி வேண்டுமோ அதனை குறிப்பிட்ட இந்த எண்ணுக்கு அழைத்தால் அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு அல்லது நிலையங்களுக்கு உங்கள் எண்ணோடு தெரிவித்து விடுவார்கள்.
இதனால் தகவல் தெரிவித்ததற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்ற ஐயம் ஒருபோதும் வேண்டாம். இதில் ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டால் தகவல் கொடுத்தவருக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணம் சிறிதும் வேண்டாம். தகவல் தெரிவித்தவரின் எண் பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அவசரம் கருதி வரக்கூடிய வாகனங்கள் எந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே இந்த எண்கள் பதிவு செய்யப்படும்.
அதேபோன்று, பல்லடுக்கு கட்டிடங்களில் சிவப்பு வண்ணத்தில் பிரேக் என பெயரிட்டு அலாரம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அங்கு தீ விபத்து போன்ற ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை நீங்கள் உணர்ந்தால் அக்குறிப்பிட்ட பெட்டியை உடைத்து அந்த அலாரத்தை அழுத்தினீர்கள் என்றால் ஒட்டுமொத்த வளாகத்திலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒலியை அது ஏற்படுத்தும். இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற முடியும். இதனை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் இருக்கும் சவால்கள் என்னென்ன? - நேத்ரா குமணன் பிரத்யேக பேட்டி!