மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல் முதல் தொடர்ந்த மிக மழை காரணமாக மதுரை மாநகர் மட்டுமன்றி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி மற்றும் மதுரை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் களத்தில் இறங்கி பணி செய்து வருகின்றனர்.
இருந்த போதும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகர், பாண்டியன் நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு அங்குள்ள பல்வேறு தெருக்களில் தண்ணீர் இன்னும் வடியாத நிலை உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், நேற்று (அக்.25) பெய்த கனமழை தொடர்ந்து இன்றும் (அக்.26) அதே போன்று மழை பெய்தால் இப்பகுதியில் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும் என்ற அச்சம் பொது மக்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ராஜி, செல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி விஜயகாந்த், ஜோதி ஆகியோர் கூறுகையில், "இப்பகுதியில் நேற்று பெய்த மழையினால் மட்டுமே வெள்ளநீர் தேங்கியது என்று சொல்வது மிக தவறு. கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் சாதாரணமாக பெய்த மழைக்கே இப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. தற்போது இன்னும் கூடுதலாக தண்ணீர் தேங்கி மிக கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம்.
இதையும் படிங்க: 70 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை!
இதற்கு மதுரை மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு முறை நாங்கள் புகாராகவும் தெரிவித்தும் கூட எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து வழங்குவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம்.
ஆகையால், உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தலையிட்டு எங்கள் பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறோம்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்