மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் 1 வருடத்திற்கும் மேல் இயங்கி வரும் வாகனங்கள், வாகனப் புகை தணிக்கைச் சான்றிதழைப் பெற்றிருப்பது அவசியம்.
தமிழ்நாட்டில் வாகனப் புகை தணிக்கை செய்வதற்காக வாகனப் புகை சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிமம் பெறுவது, பெயர் மாற்றம் செய்வது போன்றவற்றிற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு வாகனப் புகை தணிக்கை சான்றிதழ் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
வாகனங்களை திரவ எரிபொருளிலில் இருந்து, கேஸ் போன்ற வாயு எரிபொருள்களுக்கு மாற்றுவதால், புகையைக் கட்டுப்படுத்த இயலும். அதிகமாக வாகனப் புகை வெளியேறுவது தொடர்ந்தால், தமிழ்நாடு சுடுகாடாக மாறும் நிலை உருவாகும். இது குறித்து மாநில அரசின் முதன்மைச் செயலர், போக்குவரத்துத்துறை செயலர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தமிழ்நாட்டில் தாலுகா அளவில் பறக்கும் படைகளை அமைத்து, வாகனப் புகை சான்றிதழ் பெறப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்து, அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபாரதம் விதிப்பதோடு, தொடர்ந்து தவறினை மேற்கொள்பவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: “கருணை அடிப்படையில் பெண்களுக்கு மட்டுமே வேலை என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது” - உயர் நீதிமன்றம் கருத்து! - Madras High Court