மதுரை: கொடைக்கானலைச் சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கொடைக்கானலில் பல சிறிய குன்றுகள் உள்ளன. எனது வட்டக்கானல் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் சக்தி வெடிமருந்துகள் கொண்ட டெட்டனேட்டர்கள் மூலம் குவாரிகளில் தொடர்ந்து வெடித்ததைத் தொடர்ந்து, எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் இரவில் தூங்க முடியவில்லை. இதனால் அருகில் உள்ள வீடுகளில் பாதிக்கப்படுகிறது. எனவே குடியிருப்புகளுக்கு அருகே சட்டவிரோதமான முறையில் வெடி வைத்து நடைபெறும் அனுமதியற்ற குவாரிக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சட்ட விரோதமாக குவாரியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “வட்டக்கானல் பகுதியில் அனுமதி இன்றி செயல்படும் குவாரியை உடனடியாக கொடைக்கானல் கோட்டாட்சியர் நிறுத்த வேண்டும். சட்டவிரோத குவாரியில் ஈடுபட்டோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பொன்முடி மீதான வழக்கு விசாரணை வருகிற ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!