மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு, வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.
ஆக்கிரமிப்புகள் காரணமாக, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், “பழனி கிரிவல வீதியில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம்.
பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம். ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எந்தவித தாமதமின்றி வழங்க வேண்டும். பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை வேண்டும்.
பழனி முருகன் கோயில் மற்றும் கிரி வீதிகளில் பட்டா வைத்திருப்பவர்கள், தங்கள் இடத்திற்குச் சென்று வருவது தொடர்பாக வருவாய் கோட்டாச்சியரிடம் மனு அளிக்க வேண்டும். இந்த மனுக்களை வருவாய் கோட்டாட்சியர் பழனி முருகன் கோயில் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்து, மனுக்களின் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி கிரி வீதியில் பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும். பழனி முருகன் கோயில் கிரி வீதியில் உள்ள 120 ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை இசக்கி வழக்கு; சாத்தான்குளம் வழக்கை மேற்கோள்காட்டிய உயர் நீதிமன்றக்கிளை!