மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பனை மரத்திலிருந்து நுங்கு, பனை ஓலை, பதநீர், பனங்கருப்பட்டி போன்ற பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. தமிழகத்தில் ஏராளமானோர் மது பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர்.
சங்க காலத்திலிருந்து மருந்தாக பயன்படுத்தப்பட்ட கள் மீண்டும் பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது மற்றும் பீர் வகைகளில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அதனை மருத்துவ பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47-ன் படி குடிமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் மது உற்பத்தி மற்றும் விற்பனையானது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47-க்கு எதிரானது என அறிவிப்பதோடு, உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் கள்ளை இறக்கிப் பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கானது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை ரீதியான முடிவோடு தொடர்புடையதால், அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பொறுப்பேற்று மூன்றாண்டாகியும் ஆய்வு மேற்கொள்ளவில்லையா? சபையில் கோபப்பட்ட அவை முன்னவர்! - TN assembly sessions 2024