மதுரை: மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அதிபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமரவில் செய்த மனுவில், “என் 11 வயது மகள் சரண்யா 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என 2014ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமி உயிரிழப்புக்கு காரணம் அரசு தான். இந்த சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும், அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவில் சுட்டிக் காட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சரண்யாவின் தந்தை ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நீதிபதிகள், கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பணம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது.
ஆனால், ஒரு குழந்தை சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளது. அதற்கு உரிய நிதி கொடுக்க முடியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசின் மனுவை தள்ளுபடி செய்து, மேல் முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைக்கான முகாம் அமைக்க உத்தரவு!