மதுரை: திருச்சியைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் ஆற்று மணலை சட்டவிரோதமாக கடத்திய சம்பவத்தில் ஜாமீன் கோரி மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில், "மனுதாரர்கள் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே ஜாமீன் வழங்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மனுதாரர் தரப்பில், "மனுதாரர்கள் தங்களது தவறை உணர்ந்து விட்டனர். அதனை வெளிப்படுத்தும் விதமாக, திருச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏதாவது ஒரு அரசுப் பள்ளியின் நலத்திட்டத்திற்கென 15 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து நீதிபதி, "மனுதாரர்கள் தவறை உணர்ந்து, அரசுப் பள்ளியின் நலத்திட்டத்திற்காக 15,000 ரூபாய் வழங்கியுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனுதாரர்கள் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மீண்டும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது” உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை கல்வித்துறையோடு இணைக்கும் முடிவு - மதுரை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்