மதுரை: பெண்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் தலைசிறந்த ஆறு அணிகள் பங்கு பெற்றன. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளின் முடிவில், 13 புள்ளிகளோடு ஈரோடு பி.கே.ஆர் அணியினர் முதல் இடத்தை பிடித்தனர்.
அவர்களுக்கு அடுத்தபடியாக, 10 புள்ளிகளோடு மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், சென்னை பனிமலர் கல்லூரி 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் வென்றது. மேலும், சேலம் சக்தி கைலாஷ் அணி 6 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும், சென்னை ஜே.பி.ஆர் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும், விழுப்புரம் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியினர் மூன்று புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தையும் பெற்றிருந்தனர்.
மேலும், நடைபெற்ற போட்டிகளில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதினை, மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் வாலிபால் அணியின் பயிற்சியாளர் தீபன் ராஜ் பெற்றார். அதே போல், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதினை அமெரிக்கன் கல்லூரி வீராங்கனை பவித்ரா மற்றும் சிறந்த தடுப்பு ஆட்டக்காரருக்கான விருதினை அதே கல்லூரியை மீனாட்சி பெற்றார்.
இதையும் படிங்க: நடுவானில் ஓர் ஆச்சரியம்..! டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரியின் பெண்கள் வாலிபால் அணியின் பயிற்சியாளர் தீபன் ராஜ் கூறுகையில், "தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் அனைத்தும் தேசிய அளவில், பல்வேறு மாநில அணிகளுக்கு இணையான அணிகளாகும்.
இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் வாலிபால் அணியினர் மிகத் திறமையாக விளையாடி 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி தங்களது முத்திரையைப் பதித்துள்ளனர்.
மேலும், கடந்த சில வாரங்களாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டிகளில், அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது. அதன் பயிற்சியாளராக இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது" என பயிற்சியானார் தீபன் ராஜா கூறினார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்! 22 வயதில் பட்டம் வென்று அசத்தல்!