சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை, இந்த உயர் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரும், முனைவருமான கிருஷ்ணா சிவுகுலா (எம்.டெக், 1970 Batch) வழங்கியுள்ளார்.
இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய நன்கொடை மூலம் சென்னை ஐஐடி பணிகளை மேலும் மேம்படுத்தும். சென்னை ஐஐடி நிறுவன வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவன கட்டிடம் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முனைவர் கிருஷ்ணா சிவுகுலா, அவரது மனைவி ஜெகதாம்பாள், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "55 ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு பணக்காரர்களாக இருப்பவர்கள், தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு கோடிக்கணக்கில் நன்கொடை தருகின்றனர். மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்த நிதி பயன்படும்.
ஏழை குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு, தலைசிறந்த படிப்பை ஐ.ஐ.டி வழங்கியது. சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் 12.50 ரூபாயில் படித்தேன். முன்பாக 5.10 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளேன். ஒரு நாள் காலை திடீரென யோசித்தேன். என் நிறுவனத்தில் எனது ஷேர், அதன் மதிப்பு ஆகியவற்றை வைத்து, தனித்துவமாக நிதி கொடுக்க நினைத்தேன். இப்போது அதிகமாக நிதி கொடுத்துள்ளேன்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால். அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு, ஆனால் இந்தியா ஜனநாயகத்துவ நாடாக உள்ளது. இந்தியா முதலாளித்துவ நாடாக மாறும்போது மேலும் வளர்ச்சி பெருகக்கூடும். இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு உள்ள விதிமுறைகள் குறைக்கப்பட வேண்டும்.
மேலும் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் முறையாக வருமானம் வரி செலுத்த வேண்டும். கருப்பு பணம் ஒழிந்தால் மட்டுமே இந்தியா தொழில் வளர்ச்சியை பெருக்க முடியும். பெங்களூருவில் 2 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுக்கிறோம். நான் இந்து, ஆனால் சிறப்பாக பணியாற்றி வரும் கிறிஸ்தவ மருத்துவமனைக்கு நன்கொடை கொடுக்கிறேன்" என்றார் கிருஷ்ணா சிவுகுலா.
அதனைத் தொடர்ந்து பேசிய கிருஷ்ணா சிவுகுலாவின் மனைவி ஜெகதாம்பாள், "சென்னை ஐஐடிக்கு தனது கணவர் நிதி வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே அவர் கர்நாடகாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். அதேபோல் கல்விக்கும் நிதி கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு; 17,497 மாணவர்களுக்கு நாளை தரவரிசை பட்டியல்..!